0
உலகில் கண் பார்வையுள்ளவர்கள் வழி தெரியாமல் தவிக்க கூடாது என்ற நோக்கில் வரைபடங்கள் தயாரிக்கப்பட்டு, மக்கள் அவற்றை பெருமளவு பயன்படுத்தியும் வருகின்றனர். இன்றைய ஸ்மார்ட்போன் உள்ளிட்ட சில சாதனங்களில் வரைபட வசதி வழங்கப்பட்டு வருகிறது.



இந்நிலையில் பார்வையற்றவர்களும் பயன்படுத்தக் கூடிய பிரத்தியேகமான உலக வரைபடம் ஒன்றை மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறை அறிமுகம் செய்துள்ளது. மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் இந்த வரைபடத்தை உருவாக்கிய கொல்கத்தாவின் தேசிய வரைபடங்களை உருவாக்கும் அமைப்பின் தலைவர் தப்தி பேனர்ஜியை பாராட்டி பிரதமர் மோடி விருது வழங்கினார்.

உலகின் முதல் முறையாக பார்வையிழந்தோருக்கென கண்டுபிடிக்கப்பட்டுள்ள இந்த வரைபடத்தை, பார்வையற்றோர் உணர முடியும். இதுவரை பார்வையுள்ளவர்கள் மட்டும் பயன்படுத்தி வந்த வரைபடம் இனி பார்வையற்றவர்களும் பயன்படுத்தக் கூடியதாக மாறியிருக்கிறது.

உலக சுகாதார அமைப்பின் படி உலகில் மொத்தம் 28.5 கோடி பேர் பார்வையற்றவர்களாக உள்ளனர். பார்வையற்றோர் அதிகம் வசித்து வரும் நாடாக இந்தியா இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. இவர்களில் 90 சதவிகிதம் பேர் குறைந்த வருமானம் கொண்டுள்ளனர்.

கருப்பு மற்றும் வெள்ளை நிறத்தில் மொத்தம் 84 பக்கம் கொண்ட வரைபடம் A-3 வகை காகிதம் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த வரைபடம் உருவாக்குவதற்கான திட்டப்பணிகள் 1997 ஆம் ஆண்டு துவங்கி தற்சமயம் நிறைவுற்றிருக்கிறது. முதற்கட்டமாக ஆங்கிலம் மட்டுமில்லாமல் பெங்காலி, குஜராத்தி மற்றும் தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் இந்த வரைபடம் உருவாக்கப்பட்டுள்ளது.

கொல்கத்தாவின் தேசிய வரைபடங்களை உருவாக்கும் அமைப்பின் சார்பில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த வரைபடம் முதற்கட்டமாக 500 பிரதிகள் வரை தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த வரைபடத்தின் ஒரு பிரதியை தயாரிக்க 1000 ரூபாய் வரை செலவாகிறது. தற்சயம் உருவாக்கப்பட்டுள்ள வரைபடங்ள் இந்தியா முழுக்க இயங்கி வரும் பார்வையற்றோருக்கான பள்ளிகளுக்கு இலவசமாக அனுப்பப்பட உள்ளது.

Post a Comment

 
Top