0
#SupportJallikkattu
ஜல்லிக்கட்டு தமிழர்களின் அடையாளம். இது வீர விளையாட்டு என்று அறியப்பட்டாலும், காளைகள் மேல் அதை வளர்க்கும் குடும்பங்கள், குறிப்பாகப் பெண்கள் கொண்டுள்ள அன்பும் பரிவும், அந்த விளையாட்டைவிட சுவாரஸ்யமானது. வாய் பேசமுடியாத அந்த ஜீவனின் பசி, வலி, வேதனை, பயம், கோபம், தேவை இவற்றையெல்லாம் குறிப்பால் உணர்ந்து, அதை தங்கள் குழந்தைபோல் வளர்த்து வரும் தமிழ்ப்பெண்களைச் சந்தித்தோம்.


மேனகா காந்தி தன் காளை மாட்டுடன்


மதுரை வாடிப்பட்டி பகுதியில் ஜல்லிக்கட்டுக் காளை வளர்க்கிறார் இளம் பெண் மேனகாகாந்தி. ''நான் எம்.காம் முடிச்சிட்டு, கவர்மென்ட் எக்ஸாமுக்காக  படிச்சிட்டு வர்றேன். வீட்டுல காளை வளர்க்குற பொறுப்பு எனக்குதான். அதை உயிரா நினைச்சு வளர்க்குறதாலேயே ஒரு உயிரைக் கொல்றதுல உடன்பாடில்லாம, சுத்த சைவம் ஆயிட்டேன். எங்க வீட்டுல பல தலைமுறைகளா ஜல்லிக்கட்டு காளைகள் இருந்து வந்திருக்குனு எங்க அப்பா சொல்லுவாரு. அப்படி பரம்பரை பரம்பரையா எங்க ஜீன்லயே செட்டாகியிருக்குற பாசம் இது. குழந்தையில இருந்தே வீட்டுல ஜல்லிக்கட்டு மாடு நிக்கிறதைப் பார்த்து வளர்ந்ததால, எனக்கு அதுகிட்ட பயமே இருந்ததில்ல. என் காளை பேரு ராமு. இவன் எங்க வீட்டுக்கு வந்து நாலு வருஷம் ஆகுது. அதுக்கு முன்னாடி இருந்தவன் பேரும் ராமுதான். அவன் ஞாபகமாதான் அந்தப் பெயரை இவனுக்கும் வெச்சிருக்கோம். 

ராமுவுக்கு நான் சாப்பாட்டை மட்டும் வெச்சிட்டு வந்தா, 'யாருக்கு வேணும் உன் சாப்பாடு?'னு கோவிச்சிட்டு சாப்பிட மாட்டான். தடவிக் கொடுத்து வெச்சாதான் சாப்பிடுவான். பயங்கர நடிப்புக்காரன். நாம திட்டுறதெல்லாம் அவனுக்குப் புரியும். கோவம் வந்தா அப்படியே படுத்துக்குவான். சரியா சாப்பிடலைன்னா அவனுக்கு காய்ச்சல் வந்துரும். அப்புறம் அம்மாவும், நானும் அவனுக்கு நாட்டு மருந்து கொடுத்து சரி பண்ணுவோம். பனி அதிகமா இருந்தா மூச்சு விட சிரமப்படுவான். இஞ்சி, மிளகு, வெல்லம், அரிசி இதயெல்லாம் தட்டிக் கொடுப்போம். சாப்பிட்டதும் சரியாயிடுவான்.

பொது ஜல்லிக்கட்டு தவிர பிற ஊர் ஜல்லிக்கட்டு நடக்கும் போது, எங்க காளையை வெற்றிலை வெச்சு வீட்டுக்கு வந்து அழைப்பாங்க. ராசிக்காக, அப்பா அந்த தட்டை என்னையத்தான் வாங்கச் சொல்வாரு. 'என் ராமுக்கு ஒரு கீறல் கூட விழக்கூடாது சாமி' வேண்டிக்கிட்டு வாங்குவேன். முன்னாடி இருந்த ராமு பய ரொம்ப சேட்டக்காரன். நிறைய ஜல்லிக்கட்டுல ஜெயிச்சு பரிசு வாங்கிருக்கான். அண்டா, ஃபேன், பாத்திரம்னு ஒரு கல்யாணப் பொண்ணுக்கு தேவையான சீர் சாமான்களை ஜெயிச்சு வந்துருக்கான். 'உன்னக் கட்டிக்கொடுக்க சீர் கொண்டு வந்து சேத்துட்டான் பாரு உன் தம்பி'னு எங்கப்பா கேலி பண்ணுவாரு.

இந்த பீட்டாவ, எங்க வீடுகள்ள, வந்து பார்க்கச் சொல்லுங்க மொதல்ல. எங்க காள வயிறு நெறைஞ்சாதான் நாங்க கை நனைப்போம். நானாச்சும் படிச்சிருக்கேன்கிறதால, இதுல இருக்குற அரசியல் எல்லாம் தெரியுது. பாவம் எங்க கிராமத்து சனங்க... 'மாட்டை கொடுமைப் படுத்துறோம்னு சொல்லுறாங்களாமே?'னு மருகி மருகி கேட்கிறாங்க. முன்னயெல்லாம் ஜல்லிக்கட்டுனா காளைகளோட நாங்களும் துல்லிக்குதிச்சு தயாராவோம். இப்போவெல்லாம், நியூஸ் பேப்பர், டிவினு அனுமதி கிடைக்குமா கிடைக்காதானு மனம் பதைபதைக்கிறதுலயே பொங்கல் கழிஞ்சுபோயிருது. என்னமோ போங்க!" 


தன் காளையுடன் செல்வராணி


தனி ஒரு பெண்ணாக ஜல்லிக்கட்டு நடக்கும்  வாடிவாசலுக்குக்  காளையைக் கொண்டு செல்லும் வீரப்பெண்மணி, மேலூர் மாவட்டம் சென்னகரம்பட்டியைச் சேர்ந்த செல்வராணி.

''நாங்க இன்னைக்கு நேத்து  ஜல்லிக்கட்டு மாட்ட வளர்க்கல. எங்க தாத்தன், முப்பாட்டன் காலத்தில இருந்து வளர்க்குறோம். சென்னகரம்பட்டி செல்வராணி மாடு, மதுரையில மட்டுமில்ல, பல ஊர்கள்ள விளையாடு வந்திருக்கு. என் மாடு பெரும்பாலும் தோற்காது. ஒருவேளை தோத்தா, 'செல்வராணி மாடே பிடிபட்டுருச்சா?'னு எல்லாரும் அதிர்ச்சியா கேப்பாங்க. 

என் மாடு பேரு ராமு. அவன் எனக்கு அம்புட்டுப் பெருமை வாங்கிக் கொடுத்துருக்கான். நான் தேனி கலெக்டர்கிட்டயே பரிசும், பாராட்டும் வாங்கியிருக்கேன். பேருதான் ஜல்லிக்கட்டு மாடு. ஆனா அதைக் கோயில் மாடு போலத்தான் கண்ணும் கருத்துமா பார்த்துக்குவேன். கூப்பிடுறதே கோயில்மாடுனுதான் கூப்பிடுவோம். 

ஜல்லிக்கட்டு நடக்கிறதுக்கு ஒரு மாசத்துக்கு முன்னாடி இருந்து விரதம் இருந்து சாமி கும்பிடுவோம்.  ஜல்லிக்கட்டுக்குக் கிளம்பும்போது சாம்பிராணி போட்டு, நல்ல நேரம் பார்த்துதான் கூட்டிட்டுப் போவோம். ஆனா, காளைமாட்டை கொடுமைப்படுத்துறதா சொல்லி ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்கிற கொடுமையை எங்க போய் சொல்றது?  

ஜல்லிக்கட்டு நடத்தினா கூட ஒரு நாள் பிரச்னையோட முடிஞ்சிரும். ஆனா இப்ப நடத்தாம போனதால தினமும்  பிரச்னைதான். எங்களுக்கு காளை வளர்க்கத்தான் தெரியும். கோர்ட்டு, கேஸு வெவரம் தெரியாது. ஆனா, மாணவர்கள்ல இருந்து, சென்னைக்காரங்க வரை எல்லா தரப்புல இருந்தும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தர்றதை பார்க்கும்போது மனசுக்கு ஆறுதலா இருக்கு. ஆனாலும், ஜல்லிக்கட்டு நடத்தக்கூடாதுனு சொன்ன ஆரம்பத்துலயே நம்ம மக்கள் எல்லாரும் ஒண்ணா சேர்ந்து போராடியிருக்கணும். ரெண்டு வருஷம் இருந்த மாதிரி, இந்த வருஷமும் அமைதியா இருந்துருவோம்னு நெனைக்கிறாங்க. இந்த வருஷம் கண்டிப்பா ஜல்லிக்கட்டு நடத்தணும். என்ன வழக்கு வேணாலும் போட்டுக்கட்டும்... பார்த்துக்கலாம். ஜல்லிக்கட்டு சம்பந்தமா என் மேல ஏற்கெனவே பல வழக்கு இருக்கு.

பீட்டாவோட திட்டத்துக்கு பலியா, எங்க வீரத்தைக் கொடுக்க மாட்டோம். என் காளை மதுரை மட்டும் இல்லாம சுத்துவட்டாரமே ஜெயிச்சு வந்திருக்குறதால, பல லட்ச ரூபாய்க்கு விலை பேசி வாங்க வந்தாங்க நிறைய பேர். கோடி ரூபாய் கொடுத்தாலும் என் மாட்ட கொடுக்க மாட்டேன்னு சொல்லிட்டேன். மாடு எனக்குப் புள்ள மாதிரி!" 


தன் காளையுடன் சோபனா


சென்னகரம்பட்டியைச் சேர்ந்த சோபனா வளர்க்கும் காளையின் பெயர் சூர்யா. ''எங்க வீட்டுக்காரர்தான் அந்தப் பேரு வெச்சாரு. சூர்யா எனக்கு தம்பி மாதிரி. அப்புடி கவனமா பார்த்துக்குவேன். என் கணவர் சம்பாதிக்கிறதுல பாதியை சூர்யாவுக்குதான் செலவு பண்ணுவோம். பருத்திக்கொட்ட, புண்ணாக்குச் செலவு பிச்சுக்கும். ஆனாலும், 'சூர்யா பயலுக்கு கொடுத்ததுபோக தான் நமக்கு'னு என் வீட்டுக்காரர் சொல்வார்.

ஜல்லிக்கட்டுக்கு நான் போறதில்ல. ஆனாலும், இந்த ஜல்லிக்கட்டு மாட்டை வளர்க்குறது நான்தான். காலையில 7 மணிக்கு, மதியம் 2 மணிக்கு, சாயங்காலம் 6 மணிக்குனு இப்படி நேரத்துக்கு சாப்பாடு கொடுத்துடுவேன். மேய்ச்சலுக்குக் கொண்டு போய் விட்டுட்டு வருவேன். இருட்டாகிட்டா, 'சூர்யா'னு ஒரு குரல் கொடுத்தா போதும், எங்க இருந்தாலும் ஓடி வந்துரும். 

கிரீம் பிஸ்கட் சூர்யாக்கு ரெம்ப பிடிக்கும். மேங்கோ கூல்ட்ரிங்ஸுனா குஷி ஆகிடும். மிக்சரு, நொறுக்குத் தீனினு எதைக் கொடுத்தாலும் சாப்பிடும். ஆனா, கால்ல சலங்க கட்டுனா மட்டும் பிடிக்காது. அதனால கட்ட மாட்டோம். பக்கத்துல யார் நடந்து போனாலும் வாசத்தை வெச்சு கண்டுபிடிச்சுடும். அதிக பாசம் வந்திட்டா கைய செல்லமா கடிக்கும். இப்படி நாங்களும் காளைகளும் ஒண்ணு மண்ணா பழகுறதையெல்லாம் கிரண் பேடி அம்மாவை வந்து பார்க்கச் சொல்லணும். அரசை நம்பியிருக்கோம். நாட்டு மாடு இனத்தோட அழிவைப் பார்க்குற சந்ததியா நாங்க இருக்க மாட்டோம்!" 

Post a Comment

 
Top