0
ஜல்லிக்கட்டுப் போட்டிக்கு ஆதரவாக மதுரையில் இன்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின்போது எம்எல்ஏ கருணாஸ், காளையுடன் வந்தார். அப்போது பேசிய அவர், சிங்கத்தையும், புலியையும் தூக்கி தரையில் அடித்து கொன்றவர்கள் தமிழர்கள். இதற்கெல்லாம் அஞ்ச மாட்டோம் என்று ஆவேசமாக பேசினார்.

முக்குலத்தோர் புலிப்படை கட்சித் தலைவர் கருணாஸ், தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை தலைவர் தனியரசு, மனிதநேய ஜனநாயக கட்சி பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி ஆகியோர் தலைமையில் மதுரையில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 


இதில் தமிமுன் அன்சாரி பேசுகையில்,"பீட்டா பணம் வாங்கும் கூட்டம். அதனை நம்பும் உச்ச நீதிமன்றம் ஏன் தமிழனை நம்புவதில்லை. இல.கணேசன் சொல்கிறார் ஜல்லிக்கட்டை ஏறுதழுவல் என்று சொல்லி நடத்தலாம் என்று. பெத்த அம்மாவை அம்மா என்று கூப்பிடாமல் அப்பாவின் மனைவி என்று கூப்பிட முடியுமா என்று ஆவேசத்துடன் பேசினார்.

தனியரசு பேசுகையில், "ஜல்லிக்கட்டை தடை செய்துவிடலாம் என்று  பி.ஜே.பி அரசு மனப்பால் குடிக்கிறது. அது ஒரு போதும் நடக்காது. வர்தா புயலுக்கு கூட மத்திய அரசு ஒரு ரூபாய் கூட கொடுக்கவில்லை. ஆனால் கர்நாடகாவிற்கு மட்டும் 2 ஆயிரம் கோடி நிதி வழங்கியது. நெசவாளர், விவசாயிகள் பிரச்னைக்கு கூட ஓ.பி.எஸ்  உதவி செய்ய மனு அளித்தார். அதைக்கூட நிராகரித்து தமிழ்நாட்டை பின்னுக்கு தள்ளினீர்கள். ஜல்லிக்கட்டு எங்கள் அடையாளம். அதற்காக அலை அலையாய் கிளம்பி போராடுவோம்" என்றார்.

கருணாஸ் பேசுகையில், "இந்தியாவில் முதல் குடிமகன் தமிழன்தான் என்று ஆய்வு சொல்கிறது. ஜல்லிக்கட்டு காளைகளுக்கு தடைப்போட்டு விடலாம் என்று மோடி நினைக்கிறார். காளைகள் சிவபெருமானையே காத்தவை. அப்படிப்பட்ட காளைகளுக்கே தடையா? ஈழத்தமிழர் பிரச்னையில் காங்கிரஸ் செய்த துரோகத்தையும், முல்லைப்பெரியாறு பிரச்னையில் தி.மு.க.வையும் நாங்கள் என்றும் மறக்க மாட்டோம். 

2009ல் பிரபாகரனின் உயிரை குடித்து ஈழத்திற்கு செய்த துரோகம் எளிதில் மறைத்துவிட முடியாது. குதிரை  பந்தயத்தில் சூதாட்டம், குத்துச்சண்டையில் சூதாட்டம், கிரிக்கெட்டில் சூதாட்டம். இதையெல்லாம் உங்களால் தடை செய்ய முடியவில்லை. ஆனால் தமிழர்களின் பாரம்பரியமான ஜல்லிக்கட்டை மட்டும் தவறு என தடை செய்ய வந்துட்டீங்க. சாலையில் தினமும் ஆயிரக்கணக்கில் உயிர் பலியாகிறது. அதற்காக வாகனங்களுக்கு தடை  போட முடியுமா? மரணம் என்பது இயல்பாக வரக்கூடியது, அதனை தடுக்க முடியாது. அதற்கு ஜல்லிக்கட்டை ஒப்பிட்டு பார்க்ககூடாது. 

நீதிமன்றம் சிங்கத்தை அடக்க சொல்லுகிறது. சிங்கத்தையும், புலியையும் தூக்கி தரையில் அடித்து கொன்றவர்கள் தமிழர்கள். இதற்கெல்லாம் அஞ்ச மாட்டோம். நாங்கள் எல்லா மாநிலத்தையும் எதிர்த்து சமாளிப்பவர்கள். நாட்டில் தண்ணீர் பிரச்னை தலைவிரித்தாடுகிறது. அதைபற்றி பேச ஆள் இல்ல. ஜல்லிக்கட்டை தடை செய்ய வந்துட்டாங்க. தண்ணீரை பாட்டில் போட்டு வித்ததாலதான் இப்ப நாட்டில் தண்ணீர் பிரச்னை வந்திருக்கு" என்று கூறினார்.

Post a Comment

 
Top