0

தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு, எப்போது நடைபெறும் என்பது யாருக்கும் தெரியாத நிலையில், இதுகுறித்த வழக்கில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பை தேதிகுறிப்பிடாமல் தள்ளி வைத்துள்ளது. பொங்கல் பண்டிகைக்கு முன் ஜல்லிக்கட்டு தீர்ப்பு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை நீதிபதிகள் நிராகரித்து விட்டனர், 

ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான அவசரச் சட்டத்துக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ள நிலையில், தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களிலும் தடையை மீறி ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. பல இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்தியவர்களை போலீஸார் கைது செய்துள்ளனர். இளைஞர்கள் தன்னெழுச்சியாக எழுந்து, ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராடி வருகிறார்கள். 

இந்நிலையில், தமிழர்களின் பாரம்பரியத்தை பாதுகாக்க வேண்டும் என்பதில் வெளிநாடுகளில் வசிக்கும் தமிழர்களும் தங்களது ஆதரவைத் தெரிவித்துள்ளனர். ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி வழங்க வேண்டும் என்ற கோரிக்கைக்கு ஆதரவாக, ஆஸ்திரேலியா, அமெரிக்காவில் வசிக்கும் தமிழர்கள் முழக்கங்களை எழுப்பி தங்களது உணர்வுகளை பதிவு செய்துள்ளனர்.

ஜல்லிக்கட்டு ஆஸ்திரேலியா தமிழர்கள்

சிட்னியில் வாழும் தமிழர்கள், ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்துள்ளனர். அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணம், அட்லாண்டாவில் வசிக்கும் தமிழர்கள், வெள்ளிக்கிழமையன்று ஜல்லிக்கட்டுக்கு ஆதரவுக் குரல் எழுப்பியுள்ளனர். அட்லாண்டாவில் பொங்கல் கொண்டாட்டங்களுக்காக ஒன்று கூடிய தமிழ் மக்கள், ஜல்லிக்கட்டு நடத்த அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். நூற்றுக்கணக்கான தமிழர்கள், ஜல்லிக்கட்டுக்கு ஆதராவ கோஷம் எழுப்பியது, அங்குள்ள தமிழர்களின் பாரம்பர்ய உணர்வுகளை வெளிப்படுத்தும்விதமாக அமைந்தது.

தமிழர்கள் எந்த நாட்டிற்குச் சென்றாலும், தங்களது அடையாளங்களை விட்டுக்கொடுப்பதில்லை என்பதை உணர்த்துவதாக இந்த நிகழ்வு அமைந்துள்ளது.

Post a Comment

 
Top