0
தமிழர்கள் மிக விமரிசையாக கொண்டாடும் பொங்கல் பண்டிகை, இயற்கைக்கும், கால்நடைகளுக்கும் நன்றி கூறும் விதமாகவே கடைப்பிடிக்கப்படுகிறது. பொங்கல் பண்டிகையின் வரலாற்றை பார்க்கையில் கிமு 200 முதல் கிபி 300 வரையில் கடைப்பிடிக்கப்பட்டதற்கான ஆதாரங்கள் உள்ளன. தை உண் என்றும் தை நீராடல் என்றும் சங்க காலத்தில் இப்பண்டிகைப் பற்றிய குறிப்புகள் இருப்பதாக வரலாற்று ஆசிரியர்கள் கூறுகின்றனர்.

சங்க காலத்தில் பெண்கள் மார்கழி மாதத்தின் முப்பது நாட்களும் ‘பாவை நோன்பு’ என்ற விரதம் இருந்து, ‘தை நீராடல்’ பண்டிகையை கொண்டாடியுள்ளனர். பல்லவர்களின் காலமான கிபி நான்கு முதல் எட்டாம் நூற்றாண்டுகளில் இப்பண்டிகை விமரிசையாக கொண்டாடப்பட்டது. இந்த நாட்களில் கன்னிப் பெண்கள் அதிகாலையில் எழுவது, பால் மற்றும் பால் பொருட்களை உண்ணாமல் இருப்பது, தலைக்கு எண்ணெய் இடாமலும், கண்ணுக்கு மை எழுதாமலும் இருப்பார்கள். 

ஆற்று மணலில் காத்யாயனி அம்மனை சிலையாக பிடித்து வைத்து வழிபடுபவார்கள். தேவையான மழை பொழியவும், நாடு சுவிட்சமாக இருக்கவும், தங்களுக்கு நல்ல கணவன் கிடைக்கவும் வேண்டி இளம் பெண்கள் இந்த விரதத்தை மார்கழி மாதம் முழுவதும் அனுசரிப்பார்கள். தை ஒன்றாம் நாள் விரதத்தை கலைத்து அறுசுவை உணவுகளை சமைத்து உண்பார்கள். இதுவே பல நூறு ஆண்டுகள் கடந்தும் அறுவடைத் திருநாளாக கொண்டாடப்பட்டு வருகிறது.

தை நீராடல் பண்டிகை கொண்டாடப்படும் விதத்தை ஆண்டாளின் திருப்பாவையும் மாணிக்கவாசகரின் திருவெம்பாவையும் மிக விரிவாக விவரிப்பதை காணமுடியும்.

பொங்கல் தினம் இந்துமத கோட்பாட்டின்படி கடவுள்களின் இரவுப் பொழுது முடிந்து பகல் பொழுது விடியும் நேரத்தை குறிப்பதாகும்.

மஹாராஷ்ட்ராவில் பொங்கல்: இந்த மாநிலத்திலும் பொங்கல் மகர சங்கராந்திரியாக கொண்டாடப்படுகிறது. இங்கும் அன்றைய தினம் வானில் வர்ணஜாலம் புரியும்விதமாக காற்றாடிகள் விண்ணில் பறப்பதை காண முடியும். இரவு நேரங்களிலும் காற்றாடிகளில் விளக்கு பொருத்தப்பட்டு பறக்க விடப்படுவதை இங்கு காண முடியும்.

கர்நாடகாவில் பொங்கல்: இங்கு சங்கராந்தி என்று அழைக்கப்படும் பொங்கல் பண்டிகை அன்று பசு மாடுகளையும், காளைகளையும் அலங்கரித்து அவற்றிற்கு பொங்கல் ஊட்டுவர். மாலை நேரங்களில் மேள தாளங்கள் முழங்க மாடுகளை வீதிகளில் ஓட்டிச் செல்வர். இரவில் தீ மூட்டி, மாடுகளை அந்த தீயை தாண்டச் செய்வர். 

பூஜைகள் முடிந்த பின்பு வெள்ளை எள், வெல்லக்கட்டி, வேர்கடலை, தேங்காய் கொப்பரை மற்றும் சர்க்கரை கட்டி போன்றவற்றை ஒருவருக்கு ஒருவர் கொடுத்துக் கொள்வர். பெங்களூருவின் கவி கங்காதரேஷ்வரர் கோவிலில் மாலை நேரத்தில் சூரியனின் ஒளிக்கற்றைகள் நந்தியின் இரு கொம்புகளுக்கிடையே புகுந்து லிங்கத்தின் மேல் விழுவது சிறப்பானதாக விளங்குகிறது.

கேரளாவில் பொங்கல்: மகர சங்கராந்தி என்ற பெயரில் சபரிமலையின் அடிவாரத்தில் மக்கள் திரண்டு நின்று மலை உச்சியில் தெரியும் ஒளிப்பிழம்பான மகர ஜோதியை கண்டு களிப்பர். மாலைநேர தீபாராதனையின் இந்த ஜோதியை மக்கள் காண்பர்.

உத்திரபிரதேசத்தில் பொங்கல்: இங்கும் மகர சங்கராந்தி என்று அழைக்கப்படும் பொங்கல் பண்டிகையன்று மக்கள் ஆற்றில் நீராடுவதை முக்கியமாக கருதுகின்றனர். அன்றைய தினம் குளிக்காதவர்கள் அடுத்த பிறவியில் கழுதையாக பிறப்பார்கள் என்று இங்கு சொல்லப்படுவதுண்டு. 

அன்றைய தினம் அரிசி மற்றும் பருப்பு சேர்த்து கிச்சடி செய்து தானம் தருவதும் முக்கிய சடங்காக இங்கு கடைபிடிக்கப்படுகிறது. அலகாபாத்தின் திரிவேணி சங்கமத்தில் பெரிய திருவிழாவும் அன்றைய தினம் நடத்தப்படுகிறது. இங்கும் காற்றாடி விடும் போட்டி நடத்தப்படுவது குறிப்பிடத்தக்கது. 

Post a Comment

 
Top